கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் பதிவான வாக்குகள் நளை 268 மையங்களில் எண்ணப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பாகுபாடில்லாமல் அனைத்து கட்சியினரும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரியும், தேர்தலை ரத்து செய்யக்கோரியும் ஈஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணையில், குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அதேபோல தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், “மாநகராட்சியில் ஒரு இடத்திலும் நகராட்சியில் ஏழு இடங்களிலும், ஒன்பது பேரூராட்சி இடங்களிலும் சிறப்பாக வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், “நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 490 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் 150 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் மாநகரத்தில் 2,400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புறநகர் பகுதிகளில் 1,460 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் இறுதி முடிவுகள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு டேபிளுக்கு மூன்று முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போன் மின்னணு பொருட்களுக்கு அனுமதி இல்லை.
அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், புறநகர் பகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் முகவர்களாக வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 17 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு ஐந்து கி.மீக்குள் உள்ள மதுக்கடைகள் மூடப்படும். மதுக்கடைகளை மாவட்டத்தில் முழுமையாக மூட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.








