பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புதிய தலைவலி

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறி, முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறார். பாஜக கூட்டணியில் இணைந்து முதலமைச்சராக இருந்து…

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறி, முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இணைந்து முதலமைச்சராக இருந்து வந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியில் இருந்து விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து கடந்த 10ம் தேதி மீண்டும் முதலமைச்சராகி இருக்கிறார்.

அவரது அமைச்சரவை கடந்த செவ்வாய் கிழமை விரிவுபடுத்தப்பட்டது. 31 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவி ஏற்றார். இவர்களில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த லேஷி சிங்கும் ஒருவர்.

லேஷி சிங் மீது கொலை வழக்கு, முறைகேடு வழக்கு என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதற்கு அதே கட்சியைச் சேர்ந்த சக எம்எல்ஏவான பீமா பார்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

லேஷி சிங்க்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பீமா பார்தி, அப்படி என்ன அவரிடம் இருப்பதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் நினைக்கிறார் என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

லேஷி சிங் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன; அவரால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ள பீமா பார்தி, இது குறித்து தாங்கள் கூறுவதை நிதிஷ் குமார் ஏன் கேட்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளார். நாங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா என்றும் அவர் கேட்டுள்ளார்.

ஒன்று லேஷி சிங்கை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் இல்லையென்றால் தான் கட்சியின் எம்எல்ஏ பொறுப்பில் இருந்து விலகப் போவதாக பீமா பார்தி கூறியுள்ளார்.

பீமா பார்தியின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதிஷ் குமார், அவர் அவ்வாறு கூறி இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். எனினும், பீமா பார்தியை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை பீமா பார்தி புரிந்து கொள்ள மறுத்து வேறு கட்சிக்கு செல்வதாக இருந்தால் அது குறித்து அவரே யோசித்து முடிவெடுக்கட்டும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச்சராகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், சொந்த கட்சியில் இருந்தே நெருக்கடி உருவாகி இருப்பது நிதிஷ் குமாருக்கு புதிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.