பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆர்ஜேடியுடன் கூட்டணியை அமைத்து புதிய அரசு அமைக்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற அதிரடி அரசியல் மாற்றங்களால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுக்கு வந்து, பாஜக கூட்டணி அரசு அமைந்தது. சிவசேனாவின் அதிருப்தி பிரிவு தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன் ஆட்சியை பிடித்த பாஜக, முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவிற்கு விட்டுக்கொடுத்தது.
இந்நிலையில் பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் அதிரடி அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜக 74 இடங்களிலும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும் வென்றன. மொத்தமாக மொத்தம் 125 இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வென்றுள்ள போதிலும், முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டுக்கொடுத்தது பாஜக. எனினும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையே சிறுசிறு மனக்கசப்புகள் அவ்வப்போது ஏற்பட்டன. தங்களை பாஜக மதிப்பில்லை என ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் குற்றம்சாட்டி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி முறியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இரு கட்சிகள் இடையேயான கூட்டணி முறிவதை உறுதி செய்யும் வகையில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் உபேந்திர குஷ்வாலா டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். ”புதிய வடிவத்தில் புதிய கூட்டணியை அமைக்க உள்ள நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள். உங்கள் முடிவுபடி செல்லுங்கள். தேசம் உங்களுக்காக காத்திருக்கிறது” என தனது டிவிட்டர் பதவில் உபேந்திர குஷ்வாலா கூறியிருந்தார். இந்நிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் பீகார் தலைவர் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்த நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருமனதாக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைத்து பீகாரில் ஆட்சியை தொடர நிதிஷ்குமார் விரும்புவதாகக் கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக்கொண்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஆர்.கே.சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 15 ஆண்டு கால ஆட்சியால் பீகார் பெரும் பின்னடைவை சந்தித்ததாக விமர்சித்த நிதிஷ்குமார் மீண்டும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து வெட்கப்பட வேண்டும் என்றார்.







