கொரோனா மருந்துகளின் விலை உயரும்: நிர்மலா சீதாராமன்!

கொரோனா தொடர்பான மருந்துகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் கொரோனா மருந்துகளின் விலை உயரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா…

கொரோனா தொடர்பான மருந்துகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் கொரோனா மருந்துகளின் விலை உயரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொரோனா தொடர்பான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல வரிகளை ரத்து செய்து இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதிக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கொரோனா தொடர்பான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் உள்நாட்டு பொருட்கள் மற்றும் வணிக இறக்குமதிக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளித்தால் இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டால் கொரோனா மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தாங்கள் செலுத்தும் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாமல் அதனுடைய இழப்பை பொதுமக்கள் மேல்தான் திணிப்பார்கள்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 % வரியும், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 % வரியும் அவசியமாகும். இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுவிலக்கு அளித்தால் இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தாங்கள் செலுத்திய உள்ளீட்டு வரியை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்படும்.

உண்மையில் 5 % ஜிஎஸ்டி வரி உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனுக்காகவும் குடிமக்களின் நலனுக்காகவும் உள்ளது.

கொரோனா மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு விதிக்கப்படும் வரியால் மாநிலங்களுக்கு வரி பகிர்வு அளிக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு பொருளின் விலை ரூ.100 ஆக இருக்கிறது என்றால் அதில் ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். அதில் மாநில மற்றும் மத்திய அரசுகள் பாதியாக வரியை பிரிந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்லாது மத்திய ஜிஎஸ்டி வரியிலிருந்து மேலும் 41% மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன்காரணமாக கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியில் 70 % மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு ஏற்கனவே சுங்க வரி, சுகாதார செஸ் வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய முடியாது” என அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.