தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமரி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த தலைவர் உள்பட சிலர் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். இந்த ஆணையம் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.
பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இவ்வாணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு தான் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். மகளிர் ஆணைய சட்டப்படி ஆணையத்தை கலைக்கவோ, திருத்தி அமைக்கவோ முடியாது. இந்நிலையில், இந்த ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு (2021) பதவி வகித்த ஆணைய தலைவர் உள்பட சிலர் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, புதிய தலைவராக ஏ.எஸ்.குமரியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, ராணி, பவானி ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பம் பெற்று, அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போது, எந்தவித விண்ணப்பங்களும் பெறாமல், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பதவி காலம் முடிவதற்கு இன்னும் இரண்டாண்டுகள் இருக்கும் நிலையில் அவர்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.







