போதைப்பொருள் விற்பனை செய்ததாக ’சிங்கம்-2’ படத்தில் நடித்துள்ள நைஜீரிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை போலீசார் வேட்டையாடி வருகின்றனர். சில மாதங்களுக்கு பிரபல கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 11 பேர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டனர். தொடர்ந்தும் போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப் பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பெங்களூருவின் சில பகுதிகளில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர்.
அவர், நைஜிரியாவை சேர்ந்த செக்வுமே மால்வின் (45) என்பது தெரியவந்தது. கே.ஆர்.புரம் பகுதியில் பட்டாராஹள்ளியில் வசித்து வரும் அவர் தமிழ் சிங்கம்-2, விஸ்வரூபம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளதும் தெரியவந்தது. மருத்துவத்துக்காக விசாவில் இந்தியா வந்த அவர், மும்பையில் சினிமாவில் நடிப்பதற்கான பயிற்சி பெற்றுள்ளார்.
அவரை சோதனை செய்தபோது, ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அவரிடம் இருப்பது தெரிந்தது. அதைக் கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.