தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டதை தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நடிகர் விஜய்யை சந்திக்க தனியே அழைத்துச் செல்லப்படுவார்கள் என மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் இருந்து 18 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று நடிகர் விஜய்யை சந்திக்க ஆவலுடன் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர். அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படங்கள், மற்றும் விவரங்கள் வாங்கிய நிலையில் விழாவில் கலந்து கொள்ள எந்த அழைப்பும் இல்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை என புகார் கூறினர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை தனியே அழைத்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி நியூஸ் 7 தமிழில் ஒளிபரப்பானது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பில்லா ஜெகன், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நடிகர் விஜயை சந்திக்க தனியே அழைத்துச் செல்லப்படுவார்கள் என நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.
மேலும் மூன்று மாணவர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் குழப்பம் ஏற்பட்டதாகவும், தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையிலிருந்து உரிய தகவல்களை கிடைக்க தாமதமானதாலும் மாணவர்களை அழைத்துச்செல்லமுடியவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
நடிகர் விஜய்யின் வீடு அல்லது அலுவலகத்தில் வைத்து மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும் எனவும் விடுமுறை நாளில் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் பில்லா ஜெகன் நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.







