நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில் திருநெல்வேலி பேட்டையில் உள்ள காமராசர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது.
வீட்டிலும், சமுதாயத்திலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி பள்ளிக், கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியூஸ்7 தமிழ் நிகரென கொள் என்ற இந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விசிக மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கீதா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் முன்னிலையில் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி பேட்டையில் உள்ள காமராசர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள்வோம் என்ற பாலின சமத்துவ உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சோமசுந்தரம், பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து ஆண் பெண் எல்லோரும் சமம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளியில் நியூஸ்7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள , நிகரென கொள்வோம் என்ற பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழியை எற்றனர். அத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்திலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா











