பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி:
கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்திற்கான நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றனர். இதையடுத்து, நியூஸ் 7 தமிழ் சார்பில் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாதவிடாய் விடுப்பு குறித்து பள்ளி தாளாளர் டாக்டர் ரம்யா, மாணவிகளிடம் எடுத்துரைத்ததை தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
இதேபோல் கரூர் மாவட்டம், பரணி பார்க் சாரணர் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர்.
சிவகங்கை ராகினிப்பட்டி சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி:
சிவகங்கையை அடுத்த ராகினிப்பட்டியில் உள்ள சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் செயலர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றனர். இதையடுத்து, நியூஸ் 7 தமிழ் சார்பில் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை வழங்க வலியுறுத்தி மாணவர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி:
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். சமூக ஆர்வலர் பாலாஜி, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா