நியூஸ் 7 தமிழ் சார்பில் நடைபெற்று வரும் கல்வி கண்காட்சியில், கிட்டாம்பாளையம் பகுதியைச்சேர்ந்த அபி என்ற மாணவிக்கு பொறியியல் கல்வி பயில்வதற்கான முழு செலவையும் ஏற்றது பெஸ்ட் கல்வி அறக்கட்டளை ஏற்றுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த ஆண்டு கோவையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. அக்கண்காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டும் கோவையில் கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கொடிசியா அரங்கில் வெகுவிமரிசையாக கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் நியூஸ் 7 தமிழின் இந்த கல்வி கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. மேலும், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கல்வி கண்காட்சி வாயிலாக உடனடி மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, மாணவர்கள் வசதிக்காக கோவையில் ஆர்ச் முதல் கொடிசியா அரங்கம் வரை நியூஸ் 7 தமிழ் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி கண்காட்சியின் முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் கல்வி கண்காட்சியை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டார். கண்காட்சியில் இடம் பெற்று உள்ள கல்லூரிகளின் அரங்குகளைப் பார்வையிட்ட பின் நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியின் விளம்பரதாரர்களுக்கு அவர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
நியூஸ் 7 தமிழ் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள “C” ஹாலில் இரண்டாவது நாளாக இன்றும் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், பேராசிரியர் ரத்தினசபாபதி, அசெட் காலேஜ் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இயக்குநர் முகம்மது பைசல், லீடர்ஸ் டெஸ்க் நிறுவனர் சாமுவேல் , நியூஸ் 7 தமிழ் பொருப்பு ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி ஆலோசனைகளை வழங்கினர்.
நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது; பெஸ்ட் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.5000 த்திற்கான காசோலையை , அதன் செயலாளர் அப்துல் ரஷீத் & நியூஸ்7தமிழ் மூத்த பொறுப்பாசிரியர் சரவணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்
இந்த கல்வி கண்காட்சியில் கோவை கிட்டாம்பாளையம் பகுதியைச்சேர்ந்த அபி என்ற மாணவிக்கு உயர்கல்வி பயில, முழு செலவையும் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டு உதவித்தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கி உள்ளது. இந்த மாணவி வாகராயன் பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்தவர். மாணவிக்கு பொறியியல் கல்வி பயில முழு கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட முழு செலவையும் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







