பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் நிகரென கொள் என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்தது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பையும், வெற்றியையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு…..
பொறுப்புடனும் பொதுநலத்துடனும் செயல்படும் நியூஸ் 7 தமிழ் பொதுமக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு மாணவர்களும் இளைஞர்களும் அடிமையாவதை தடுக்க, கடந்த ஆண்டு “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்தது. இந்த இயக்கத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன் தொடர்ச்சியாக, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தவும் காவல்துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, ஆண்-பெண் இடையே உள்ள பாலின பாகுபாட்டை களைய, மார்ச் மாதம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துவது என முடிவெடுத்த நியூஸ் 7 தமிழ், மார்ச் மாதம் முழுவதும் பாலின சமத்துவ மாதமாக கடைப்பிடிக்க தீர்மானித்தது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் மார்ச் 1-ம் தேதி நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கீதா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்திற்கான இலச்சினையை நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், சிறப்பு விருந்தினர்கள் ரவிக்குமார், கீதா இளங்கோவன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதையடுத்து, வன்கொடுமைகளில் இருந்து பெண்களை காப்பது தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. எம்.பி ரவிக்குமார் உறுதிமொழியை வாசிக்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, எம்.பி ரவிக்குமார், எழுத்தாளர் கீதா இளங்கோவன் ஆகியோர், மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின்போது, நியூஸ் 7 தமிழில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டது. இதில், மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். நியூஸ் 7 தமிழின் இந்த முன்னெடுப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களிலும் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நியூஸ் 7 தமிழின் முன்னெடுப்பை பாராட்டி, பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல், கவிஞர் வைரமுத்து, திரைப்பட இயக்குநர்கள் அமீர், பரமன் உள்ளிட்டோரும் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மார்ச் மாதம் முழுவதும் நடத்தப்பட்ட நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை வழங்க வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் நடத்திய கையெழுத்து இயக்கத்திலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாலின சமத்துவத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.
சமூக அக்கறையுடன் நியூஸ் 7 தமிழ் மேற்கொண்ட கையெழுத்து இயக்கத்தின் எதிரொலியாக, பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி ஸ்ரீமகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்களும், ஊழியர்களும் மாதவிடாய் காலங்களில் முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமல் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என உத்திரமேரூர் அருகே உள்ள குப்பையநல்லூர் லயோலா மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு வெளியிட்டது.
இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும், ரத்தினம் ஆட்டோ மொபைல்ஸ் என்ற எரிபொருள் விற்பனை நிலையமும், மாதவிடாய் கால விடுமுறையை அறிவித்தது. தமது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராதிகா வினுபாலன் கூறினார்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நியூஸ் 7 தமிழ் சார்பில் நடைபெற்ற போது, தமது பள்ளி சார்பில் நாட்றம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அப்பள்ளியின் தாளாளர் அசோகன் அறிவித்தார்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் மத்தியிலும் பாலின சமத்துவ உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் நியூஸ் 7 தமிழ் மேற்கொண்ட முயற்சிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்ததுடன் தங்கள் ஆதரவையும் வழங்கினர். அதற்கு சான்றாக இரண்டு கல்வி நிறுவனங்களும், ஒரு தனியார் நிறுவனமும் மாதவிடாய் கால விடுமுறை அறிவிப்பு அமைந்துள்ளது. அத்துடன், ஒரு தனியார் பள்ளி நிர்வாகம், நியூஸ் 7 தமிழ் மேற்கொண்ட விழிப்புணர்வு இயக்கத்தின் எதிரொலியாக ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாலின சமத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதும், அந்த உணர்வு நாடு முழுவதும் பரவி, பாலின சமத்துவமிக்க நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதற்கான முயற்சி தான் நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை வழங்கவும், சமூகத்தில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வுகளை களையவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நியூஸ் 7 தமிழின் குரல், சாமானிய மக்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும்.












