கலாஷேத்ராவில் பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராக கல்லூரி இயக்குநர்களுக்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவு

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்  கல்லூரியின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் வரும் 3 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா…

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 
கல்லூரியின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் வரும் 3 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு
பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,
கல்லூரி வளாகத்தில் மாணவ – மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில்
கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி தனது தோழியுடன் நேற்று மாலை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி பேராசிரியர் ஹரிபத்மன் என்பவர் மீது புகார் அளித்தார்.

படிக்கும் காலத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து மகளிர் போலீசார், உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ஹரிபத்மன், கலாஷேத்ரா கல்லூரியில்
கேரள மாணவியை போன்று எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்?
என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஐதராபாத்தில் அரங்கேற்றம் நிகழ்ச்சியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை சென்னைக்கு வரவழைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மகளிர் போலீசார் ஹரிபத்மனிடம் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளனர். மேலும் கல்லூரிக்கு நேரில் சென்றும்
விசாரணை நடத்தப்பட உள்ளது. கலாஷேத்ரா விவகாரம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதன்படி போலீசாரும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து
விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி, கலாஷேத்ரா கல்லூரியில்
நேற்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த
2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள்
தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார்
அளித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமசந்திரன் மற்றும் துணை இயக்குநர் பத்மாவதி ஆகியோர் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களிடம் பேராசிரியர் பாலியல் தொல்லை தொடர்பாக எத்தனை மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது என்ன நடவடிக்கை பாலியலை தடுக்கும் கமிட்டி விசாரணை கமிட்டி விசாரணை நடத்தியது என பல விவரங்களை கேட்க உள்ளனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் அளிக்கும் அறிக்கை போலீசார் விசாரணைக்கு பெரிதும் உதவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.