மதுரை மாநகரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நடத்திய பிரமாண்ட கள ஆய்வில் மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கடந்த 26ம் தேதி தலைநகரான சென்னையில் பிரமாண்ட கள ஆய்வு நடத்தி மெட்ரோ பணி, மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றது. இதன் விளைவாக தமிழக அரசு பணிகளை விரைந்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, நேற்று தலைமை செயலாளர் மழைநீர் வடிகால் பணிகள் நடக்கும் பகுதிகளை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சியும் நியூஸ் 7 தமிழில் சுட்டிக்காட்டப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு கண்டு வருகிறது.
இதேபோல் மதுரையிலும் இன்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பிரமாண்ட களஆய்வு நடத்தி வருகிறது. இதில், மதுரை மாநகராட்சி 2 வார்டு கூடல்நகர் பகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு பணிகள் நிறைவடையாதால் சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் சாலை விபத்துகள் நேரிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி இன்று கள ஆய்வு நடத்தி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செய்தியாளரிடம் பேசுகையில், பாதள சாக்கடை மற்றும் குடிநீர் கொண்டு செல்லப்பட்ட கூடல்நகரில் தோண்டப்பட்ட சாலைகளால் தினமும் 10 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் கோசாக்குளம் பகுதி மக்கள் கூறுகையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக சேதமடைந்த சாலைகளை இதுவரை சீரமைக்கவில்லை. சுமார் 5 கி.மீ. வரை சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் நகரப்பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மேலும் தினந்தோறும் அதிகளவில் விபத்துகளும் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை வசதிகளை செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், மதுரை முத்துப்பட்டி பகுதியில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சேதமடைந்துள்ளதாகவும், மாநகராட்சி குப்பைகளை சாலையில் கொட்டுவதாகவும், தெரு விளக்கு இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் சாலையில் செல்ல கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சாலையில் உள்ள பள்ளத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் விழும் நிலை உள்ளதாகவும், எனவே சாலைகளை மாநகராட்சி அதிகாரிகள் சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







