நியூஸ் 7 தமிழ் செய்தியின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் வறட்சியால் கருகும் மாமரங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் 90 சதவீத மா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நேரலை செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் செய்யப்பட்டுள்ள மா சாகுபடி, வறட்சியால் கடும் பாதிப்படைந்திருப்பதாக கூறியுள்ளார்.
வறட்சியால் கிணறுகளும் ஏரிகளும் வறண்டு பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் 90 சதவீத மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியள்ள எடப்பாடி பழனிசாமி, ஆயிரம் அடிக்கு கீழே நீர்மட்டம் சென்றுவிட்டதால் ஆழ்துளை பாசனமும் முழு பலனை தரவில்லை என விவசாயிகள் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மாமரங்கள் கருகிவிடாமல் இருக்க லாரிகள் மூலம் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து மா மரங்களை காப்பாற்ற வேண்டும் என மா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர் இல்லாமல் கருகும் மாமரங்களைப் பார்த்து விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, லாரிகள் மூலம் அவர்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








