புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுபான கிடங்குகளில் கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விடவும் பன்மடங்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகும்.
இந்த நிலையில் புதுச்சேரி எழில்நகரில் உள்ள மிகப்பெரிய மதுபான கிடங்கில் கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கலால் துறை துணை ஆணையர் சுதாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரசுக்கு செலுத்த வேண்டிய கலால் வரி, விற்பனை வரியை முன்னதாக கலால் துறை வசூலித்து விடுகின்றது. ஆகவே விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் அரசு சார்பில் வழங்கப்படும் முத்திரை இருக்கின்றதா என்றும், போலி மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றதா என்றும் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர விடுதிகள் மற்றும் தனியாக நிகழ்ச்சி நடத்துவோர் இரவு 1 மணி வரை மட்டுமே மது விற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு கொண்டாட முறையாக அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் 18 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில், புதுவையில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 7 மணி முதல் 1-ஆம் தேதி வரை மதுபானம் விற்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








