விடுதலை படத்தில் இடம்பெறவுள்ள ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சியே விடுதலை முதல் பாகத்தின் க்ளைமாக்ஸாகவும் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாகவும் அமையும்.
‘அசுரன்’ படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு விடுதலைத் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த ஓராண்டிற்கும் மேல் இப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். சத்தியமங்கலம், ஈரோடு போன்ற காட்டுப் பகுதியில் விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துவருகிறார்.
விடுதலைப் படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயம் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தின் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், தற்போது விடுதலை படத்தில் இடம்பெறவுள்ள ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சியை படமாக்கிவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சண்டைக் காட்சி விடுதலை முதல் பாகத்தின் க்ளைமாக்ஸாகவும் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாகவும் அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படப்பிடிப்பில் தான் இரண்டாம் பாகத்தில் இடம்பெறவுள்ள புதிய கதாபாத்திரங்கள் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய திரைத்துறையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜிவ் மேனன் விடுதலைப் படத்தில் மிகமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் விரைவிலேயே அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.







