மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருவதால் காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் பால் பொருட்கள் கடைகள் அனைத்தும் காலையில் நான்கு மணி நேரங்களுக்கு மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க காய்கறி கடைகள், பால் பொருட்கள் கடைகள், பழக்கடைகள், மளிகைகடைகள், பேக்கரிகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகிய அனைத்தும் நாளை முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே இயங்கப்படும் என்று மகாரஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வீடுகளுக்கு சென்று பொருட்களை டெலிவரி செய்யும் சேவைகளும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 68,631 பேர் புதிதாகக் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 58,924 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 351 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.







