இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகானாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சலீம், இந்தியா பாகிஸ்தான், கோடியில் ஒருவன், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைகாரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சசி இயக்கியிருந்த இப்படம் அம்மா பாசத்தை அடிப்படையாக கொண்டிருந்தது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி மற்றும் சசி கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. ‘நூறு சாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘நூறு சாமி’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரின் படி இப்படம் ஜூன் 19-ம் தேதி வெளியாக உள்ளது.








