இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருத்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தல்கள் நடைமுறை படுத்தப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
அரசு மருத்துமனைகளைப் போன்று தனியார் மருத்துவமனைகளும் நோயாளிகளுக்கு தடையற்ற சிகிச்சை வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் சிகிச்சை வழங்க மறுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அமைச்சர் அருண்ராஜும், தமிழ்நாடு அரசும் வழங்கிட வேண்டும்.
டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. கட்டணக் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையும் அரசு விடுக்க வேண்டும். மீறும் மருத்துவமனைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




