கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உதவி எண்களை வெளியிட்டும், இந்தி மொழியில் பேசியும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேலைபார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் கடந்த 3-ம் தேதி அன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இவரை யாரோ கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக வதந்தி பரவியதை அடுத்து, திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் , அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சஞ்சீவ் குமார் இறந்தது ஒரு விபத்து என்பதை புரியவைத்து அனைவரையும் போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள் எனவும் போலியான தகவல்கள் வெளியாகி பரபரப்பானது. இதனால், வடமாநில தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், துரிதமாக செயல்பட்ட காவல்துறை வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததோடு, போலி செய்திகளை பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவும் செய்தது.
இதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனால் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தனது ட்விட்டர் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உதவி எண்களை வெளியிட்டும், இந்தி மொழியில் பேசியும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதவிர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில், காவல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்தி பேசத் தெரிந்த காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட மாநில தொழிலாளர்கள் குறித்த தவறான வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா











