சர்வதேச தரத்திற்கு இந்திய மாணவர்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சர்வதேச மாணவர்களுக்கு இணையாக இந்திய மாணவர்களை தயார் படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய…

சர்வதேச மாணவர்களுக்கு இணையாக இந்திய மாணவர்களை தயார் படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசின் ரோஜ்கர் மேளா 6-வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், இரயில்வே, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மத்திய  இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பல்வேறு பகுதியை சேர்ந்த 200க்கு மேற்பட்ட இளைஞர்கள்  துறை ரீதியான பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:

”கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையின் போது, ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாத பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இந்த ஒரு வருடத்தில் மட்டும் 4.20 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வேலை வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து மாநிலத்திலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பணி நியமன ஆணையை பெறும் நம்முடைய இளைஞர்கள், வரும் தலைமுறைகளை வழிநடத்தும் அதிகாரிகளாக இருக்க வேண்டும். இதுபோலவே இந்தியா முழுவதும் 45 இடத்தில், 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்து கடந்த 9 ஆண்டுகளில் மகத்தான சாதனை செய்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வரும் போது 5 நகரங்களில் செயல்பட்ட மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 27 நகரங்களில் செயல்படுகிறது. மேலும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் திட்டம், 80 கோடி பேருக்கு ரேஷன் கார்டு மூலம் அரிசி பருப்பு வழங்கும் திட்டம் ஆகியவை நிரைவேற்றப்பட்டன.

2020-ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கொள்கை மூலம் இந்திய மாணவர்கள் சர்வதேச மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது சர்வதேச நாடுகளுக்கு இணையான கல்வி கொள்கையை கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் 500 ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இருந்தது. ஆனால் தற்போது 1 லட்சம் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா 5வது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா, உக்ரேன் போருக்கு இடையே 23 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் இந்திய அழைத்து வரப்பட்டனர். ராணுவ தளவாடம் இறக்குமதி செய்து வந்த நாம், தற்போது தொழிற்சாலை ஆரம்பித்து நாம் ஏற்றுமதி செய்கிறோம். அடுத்த 25 ஆண்டுகள் நாம் அனைவரும் இணைந்து நாடு முன்னேற செயல்பட வேண்டும்.

ஜல் ஜீவன் திட்டம் மூலம் வீடு தோறும் குழாய் அமைத்து சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை தலித் மக்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் வரும் டிசம்பர் வரை 80 கோடி பேருக்கு 5 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு வழங்க உள்ளோம். இந்தியா 2047-ம் ஆண்டில் மிகப்பெரிய வல்லமை மிக்க நாடாகவும், ஆற்றல் மிக்க நாடாகவும் உருவாகி வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.