இயக்குனர் நிலேஷ் திவாரி இயக்கும் ராமாயணக் கதையை கொண்ட படத்தில் நடிகர் யாஷ் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கே.ஜி.எஃப்’ படங்கள் மூலம் பிரபலமான கன்னட நடிகர் யாஷ், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில் நிலேஷ் திவாரி இயக்கும் ராமாயணக் கதையை கொண்ட படத்தில் நடிகர் யாஷ் ராவணனாகவும், ரன்பீர் கபூர் ராமணாகவும், ஆலியா பட் சீதையாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆரம்பத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷ் விருப்பமாக இருந்ததாகவும், ராமனாக நடிப்பதை விட ராவணனாக நடிப்பது சவாலானது என்பதால் ஆர்வமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். எனவே, அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதை தனது ரசிகர்கள் விரும்பவில்லை என்பதால் யாஷ் அதில் நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடிகர் யாஷ் அளித்த பேட்டியில், “ரசிகர்களிடம் கவனமாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக நான் நடித்தால் அவர்கள் அதிகம் எதிர்வினையாற்றுவார்கள்.” என்று கூறியிருந்தார்.
சமீபத்திய தகவல்களின்படி, யாஷ் தனது அடுத்த திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் கீது மோகன்தாஸுடன் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. தற்போது ’யாஷ் 19’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







