முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கான வரப்பிரசாதம்” – ஐ.ஐ.டி. இயக்குநர்

புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், பாதுகாப்பு வழிமுறைகளுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 872 பேருக்கு நேரிலும், 1,36,873 பேருக்கு அந்தந்த கல்லூரிகள், தபால் மூலம் என்று மொத்தம் 1,37,745 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 3 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டமும், 683 பேருக்கு முனைவர் பட்டங்களும், 7 பேருக்கு சிறந்த ஆய்வேட்டுக்கான விருதும், 86 பேருக்கு தனிச்சிறப்புடன் முதல் நிலை தகுதிச் சான்றிதழும், 93 பேருக்கு பரிசு மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழாவில் பேசிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, மூன்றாம் பாலினத்துக்கு இடம் வழங்கியது, 7 புதிய கல்லூரிகள் மற்றும் 46 புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியது, பெரிய புராணம், சைவ சிந்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ், ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்தது, 1990-ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருந்து தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்கியது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது என்று சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

பின்னர் பேசிய சிறப்பு விருந்தினரும், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநருமான பாஸ்கர் ராமமூர்த்தி, உயர்கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கை, மாணவர்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், புதிய கல்விக் கொள்கையால் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறினார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேரில் பட்டம் பெற்ற 872 மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைக் காட்டிய பின்னரே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ளாத மாணவர்கள் தங்களையும் அரங்குக்குள் அனுமதிக்கக் கோரி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பின்னர் அவர்களை அரங்கின் முதல் தளத்துக்கு அழைத்துச் சென்று விழா ஏற்பாட்டாளர்கள் அமர வைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Vandhana

பாவம் பார்த்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்: சீமான்!

Jeba Arul Robinson

நேதாஜி உருவப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்க கோரிய மனு!

Niruban Chakkaaravarthi