இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வரி விதிக்க டிரம்ப் திட்டம்?

தொழில்துறை உற்பத்தியில் அதிக உற்பத்தித் திறன் இருப்பதாகக் கூறி, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை (Reciprocal Tariffs) விதித்ததற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பின்னடைவைச் சந்தித்தார். இதையடுத்து, மாற்று நடவடிக்கையாக அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் (Section 301) கீழ் இரண்டு தனித்தனி விசாரணைகளை டிரம்ப் நிர்வாகம் தொடங்கியது. அதில், இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 16 நாடுகளில் தொழில்துறை உற்பத்தித் திறன் தேவைக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை முடிவுகள் தற்போது வெளியாக உள்ளன. இந்த விசாரணை தொடங்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) தனது அறிக்கையை வெளியிட்டு, புதிய வரிகளைப் பரிந்துரைக்க உள்ளது.

இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது என மத்திய அரசு நம்பிக்கை!

இந்த விசாரணையின் முடிவுகள் இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கட்டமைப்பு ரீதியாகத் தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறன் இல்லை என்றும், எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய தேவையை எதிர்பார்த்தே உற்பத்தி உபரி இருப்பதாகவும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக இந்திய அரசு எந்தவிதமான மானியங்களையோ அல்லது பிற சலுகைகளையோ வழங்கவில்லை என்றும் அமெரிக்க அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது இந்திய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேநேரத்தில், உள்நாட்டுத் தேவையைவிட அதிகமாக உற்பத்தி செய்யும் எந்தவொரு நாடும் தனது உபரி உற்பத்தியை ஏற்றுமதி செய்வது இயல்பானதுதான் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது வரி!

இதற்கு முன்பு, கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது 10 முதல் 12.5 சதவீதம் வரை கூடுதல் வரிகளை அமெரிக்கா விதித்திருந்தது. கட்டாய உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி அமெரிக்க ஏற்றுமதியைப் பாதிப்பதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த விசாரணையின் ஆரம்பகட்டத்தில் இந்தியாவுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியில் 10 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா சில சலுகைகளைப் பெற முடிந்தது. தற்போதைய இரண்டாவது விசாரணையின் அறிக்கை வெளியான பிறகு, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் (Hearings) நடத்தப்படும். அதன்பிறகே இறுதி வரி விதிப்பு அறிவிக்கப்படும். இந்த நடைமுறைகள் முடிந்து சுமார் 45 நாட்களுக்குள் இறுதி வரி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வர்த்தக வரி கட்டமைப்பு: இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை!

இறுதி வரி அறிவிக்கப்பட்ட பிறகே டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வர்த்தக வரி கட்டமைப்பு குறித்த முழுமையான தெளிவு கிடைக்கும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, பிராந்தியத்தில் உள்ள போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஒப்பீட்டு அனுகூலம் (Comparative Advantage) கிடைக்கும் வகையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையே, கட்டாய உழைப்பு தொடர்பான முதல் விசாரணையின் அடிப்படையில் விதிக்கப்பட்ட வரிகள் அமெரிக்க நீதிமன்றங்களில் சவால்களைச் சந்தித்துள்ளன.

தற்போதைய இரண்டாவது விசாரணையின் முடிவுகளும் நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான விசாரணை முடிவுகள் முன்வைக்கப்படுவது சட்டரீதியான கேள்விகளை எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் முதல் 20 முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடுகளில், கனடா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் இந்த நடவடிக்கையின் கீழ் வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய ஐரோப்பிய நாடுகளும் இதில் அடங்கும். மேலும், அமெரிக்காவின் முதல் 20 வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத நார்வே, இந்தோனேசியா, கம்போடியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்த விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.