தமிழக சட்டசபையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசியவர்,
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்பு கட்டுமான திறன் பயிற்சி வழங்க 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.76.46 கோடியில் கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள்” நிறுவப்படும்.
தமிழ்நாடு தொழிலாளர்களின் கட்டுமானத் திறமையை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமானத் தொழிற்பிரிவுகளில் போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களை பெறும் வெற்றியாளர்களுக்கு ஆண்டுதோறும் “முதலமைச்சரின் கட்டுமானத் தொழிலாளர் வெற்றி விருதுகள்” பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கான நிதியினை 3 கோடியே 4 இலட்சம் ரூபாயிலிருந்து 3 கோடியே 72 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பெருநகரங்ளுக்கு வேலை தேடி வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய இடை நேர தங்குமிடங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பெருநகரங்களில் 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
பதிவு பெற்ற 1000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிறப்பு திறன் பயிற்சி அளித்து, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு “அயலகம் செல்லும் தமிழ்நாடு கட்டுமான வெற்றி கரங்கள்” திட்டம் 15 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் 10 இலட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 1000 தொழிலாளர்களுக்கு, இ-பைக் வாங்குவதற்கு வங்கி மூலம் பெறப்படும் கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் தானியங்கி மோட்டார் மற்றும் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில், 1000 தொழிலாளர்களுக்கு புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கிட 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் மற்றும் 1000 தொழிலாளர்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களை சி.என்.ஜி முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமான வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வர்ணம் பூசுதல் வேலை உள்ளிட்ட பல தொழில் இனங்களில், நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் ஊதிய இழப்பீட்டுத் தொகையுடன் கூடிய ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி,50,000 தொழிலாளர்களுக்கு 48 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
கட்டுமானத்தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வினை மேம்படுத்தி விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்புமாதிரிகள் மற்றும் சுயபாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு நடமாடும் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி மையங்கள் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவ்வாரியத்தின் மறுசீரமைப்பு இணையதளம் செய்யப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மென்பாடக் குறிப்புகள் வழங்குவதற்காக, மெய்நிகர் கற்றல் வலைதளத்திற்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு 15 68 இலட்சத்து ஆயிரம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்கள் அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாரியத்தின் இணையதள சேவைகளை வழங்கும் வகையில் 50 வசதி மையங்கள் அமைக்கப்படும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 1 கோடி ரூபாய் செலவில் உயர் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்.
“ஐடிஐ வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றி திட்டம்” மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை உறுதி செய்ய 7 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




