திருவள்ளுவர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் புகுந்த மர்ம நபர் மாணவர்களின் செல்போன்கள், உடைமைகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நாமக்கல், ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் பகுதியில் திருவள்ளுவர்
அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் எதிர்ப்புறம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பக்ரித் விடுமுறைக்காக மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில்
கல்லூரி விடுதியில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே தங்கி உள்ளனர். விடுதியின் சமையலர் மற்றும் வார்டனும் அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு
சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் குறைவாக உள்ளதை அறிந்த மர்ம நபர் விடியற்காலை 4.30 மணி அளவில் விடுதிக்குள் நுழைந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் மூன்று செல்போன்கள், பேக் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர் கல்லூரி மாணவர் விடுதியில் புகுந்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து மாணவர்களிடம் விசாரித்த போது சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.








