நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் மட்டுமே செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே மாதம் 14-ம் தேதி இரவு திடீரென பாறை சரிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து மாவட்டத்தில் குவாரிகள் மற்றும் கிரசர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பாக உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வழக்கம் போல் குவாரிகளில் இருந்து கற்களை லாரிகள் மூலம் ஏற்றி செல்ல டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க நெல்லை புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படவும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி ரூபாய் மாவட்டம் நிர்வாகம் சார்பாக குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிமுறை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து புதிய நோட்டீஸ் வழங்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








