சுதந்திர தினத்திற்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்டர்லி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும். ஆனால், அரசிடமிருந்தோ, டிஜிபியிடமிருந்தோ அந்த வார்த்தை வருவதில்லை. ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆர்டர்லிகள் விவகாரத்தில் முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது. உரிய நடவடிக்கை வேண்டும். 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
ஆர்டர்லிகளை பயன்படுத்தக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மைச் செயலாளாரின் உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவது, புகார்களில் நடவடிக்கை, 24 மணி நேர ரோந்து போன்ற காவல் துறையினரின் பணிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 19 ஆர்டர்லிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 24 மணி நேரம் கூட காவல் துறைக்கு போதவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா








