இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 800 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான் பவுலராக இருந்தவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரரும் இவர் தான். இப்படி சாதனை நாயகனாக வலம் வந்த முரளிதரன் தன் வாழ்க்கையில் ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். பலரும் அறிந்திடாத அவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை மையமாக வைத்து 800 என்கிற திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.
இப்படத்திற்கு முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஈழப்போர் பிரச்னையில் தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனால், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார். இதனால் 800 படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்கும் நடிகர் யார்? இதை அறிய பலர் ஆவலாக இருந்தனர். இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் முத்தையா முரளிதரனின் தோற்றத்தில் மதுர் மிட்டல் இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் சலீம் கதாபாத்திரத்தில் நடித்தவர் மதுர் மிட்டல். இவர் மில்லியன் டாலர் ஆர்ம், கஹின் பியார் ந ஹோ ஜயே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இப்படத்தில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியாக உள்ளன. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடந்துவரும் இப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. ஜிப்ரன் இசையமைக்க பிரவின் கே.எல்.எடிட்டிங் செய்கிறார்.இந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் வெளியிட்டனர். முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.