34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

ஜம்மு காஷ்மீரின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு  தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ  ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்  நீண்டகால  செயல் திட்டங்களில் ஒன்றாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரிவு 370-ஐ  நீக்கிய உடனேயே அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை ரத்து மற்றும் முக்கியமான அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறை போன்றவற்றை மத்திய அரசு அமலில் கொண்டுவந்தது.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரின் சிறப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம் தோறும் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்த வழக்கின் மனுதாரருமான ஹசனைன் மசூதி ஊடகங்களிடம் பேசியபோது “ வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளன. எல்லா கோணங்களிலும் விசாரணை நடைபெற்றது. திருப்திகரமான வாதமாக இது அமைந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram