மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார். சனாதன தர்மத்தை எதிர்த்து பேசுபவர்கள் எல்லாம் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடும் போதெல்லாம் எதிர்த்து போட்டியிட்டவர்கள்.
தனபால் சட்டப்பேரவை தலைவராக இருந்த போது சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதல்வர், வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் வெளிவந்தது
முன்னாள் சபாநாயகர் தனபாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள். சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி எங்கள் கட்சி.
சனாதனம் என்பதை இன்றைக்கு பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள். ஊழலை மறைப்பதற்கு விலைவாசி உயர்வை மறைப்பதற்கு இன்றைக்கு இந்த நாடகத்தை திமுக அரங்கேற்றி இருக்கிறது. எங்கள் இயக்கத்தை பொறுத்தவரையில் தலைவர் எம்ஜிஆர் வழியில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மதத்திற்கு, சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி எங்கள் கட்சி.
யாரும் எங்கள் கட்சியை குறை சொல்ல முடியாது. வாரிசு அரசியல் செய்யும் காலம் விரைவில் முடிவு கட்டப்படும். தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் எதற்காக அச்சப்படுகிறார்? தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? சூப்பர் முதலமைச்சர் செய்த சாதனை இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலைக்கு வந்தது தான்.
ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் 2.75 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். திறமை இல்லாத முதலமைச்சர் ஆட்சி செய்து அதன் காரணமாக நிறைய திட்டங்கள் பாழாகி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சீமான் என்ன பேசுகிறார் என்று எனக்கு புரியவில்லை, திமுகவை எதிர்த்தும் பேசுகிறார் அவ்வபோது ஆதரிப்பேன் எனவும் பேசுகிறார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.