சொந்த இடத்தில் புதிய வீடு கட்டிய மீனவரை, அப்பகுதியைச் சேர்ந்த சிலரே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர், பூங்காவனம் புரத்தைச் சேர்ந்தவர் குப்பன். மீனவரான இவர் ஒண்டிகுப்பம் 4 வது தெருவில் வசித்து வந்திருக்கிறார். குப்பனுக்கு சொந்தமான இடம் ஒன்று அதே பகுதி 3 வது தெருவில் இருக்கிறது. இந்த இடத்தில் வீடு கட்ட குப்பன் முடிவெடுத்திருக்கிறார்.
திட்டமிட்டபடி அந்த இடத்தில் வீட்டையும் கட்டி முடித்திருக்கிறார் குப்பன். ஆனால் அந்த இடத்தில் வீட்டை கட்டக்கூடாது என்று குப்பனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மோகன், ரகு மற்றும் துரைராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். தொடர்ந்து மூவரும் சேர்ந்து குப்பனுக்கு இடையூறு அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அவர்களின் எதிர்ப்பை சமாளித்து வீடு கட்டும் பணியை நிறுத்தாமல் இருந்திருக்கிறார் குப்பன். இந்த சூழலில் கொலை நடந்த அன்று ஒண்டிகுப்பம் பெருமாள் கோயில் அருகில் மூவரும் சேர்ந்து குப்பனோடு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் வாய்தகராறு கைகலப்பாக மாறி அங்கிருந்த கட்டை மற்றும் கற்களைக்கொண்டு மூவரும் சேர்ந்து குப்பனை தாக்கியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் திருவெற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் சுதாகர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
அதே நேரத்தில் படுகாயமடைந்த குப்பனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பான அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி மோகன் மற்றும் ரகுவை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான துரைராஜை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். புதிய வீடு கட்டிய மீனவரை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அடித்தே கொலை செய்த சம்பவம் திருவொற்றியூரில் உள்ள பூங்காவனம்புரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







