தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று ஆளுநர் உரையுடன் காலை தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முக்கிய இந்துக் கோயில்களில் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்தவும், பராமரிப்பை செம்மைப்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், மாநில அளவில் உயர்மட்ட ஆலோசனைக்குழு மீண்டும் அமைக்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் சுற்றுலா திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், நடப்பாண்டில் பெருந்திட்டம் ஒன்று வெளியிடப்படும் என குறிப்பிட்டார். மேலும், பழங்கால கோட்டைகள், அரண்மனைகளை பழமை மாறாமல் புதுப்பித்து, பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.







