அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு – மத்திய கல்வி அமைச்சர்…!

நீட் நுழைவுத் தேர்வானது அடுத்த ஆண்டு முதல் கணினி வழி முறையில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக யுஜி நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் பல்வேறு இடங்களில் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் யுஜி நீட் மறுத்தேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் “நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது ; மே 3-ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே 7-ஆம் தேதியன்று யூகிப்பு வினாத்தாள் (guess paper) ஒன்றில் இடம்பெற்றிருந்த சில கேள்விகள், அசல் வினாத்தாளிலும் இடம் பெற்றிருந்ததாக NTA-க்கு புகார் வந்தது. உயர்கல்வித் துறை உடனடியாக ஒரு விசாரணையைத் தொடங்கியது. ‘யூகிப்பு வினாத்தாள்’ என்ற போர்வையில், உண்மையான தேர்வு வினாக்கள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

முறைகேடுகள் விஷயத்தில் நாங்கள் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ (zero tolerance) கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம். இந்த விவகாரம் குறித்த விசாரணை சிபிஐ-யிடம் (CBI) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கசிவிற்கு மூல காரணம் OMR தான். எனவே, அடுத்த ஆண்டிலிருந்து நீட் தேர்வு கணினி வழித் தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.