தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி அந்த சட்டங்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் 16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமது உரையில் கூறியதாவது;
“100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும்.
பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான சட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தமிழக அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.







