உள்ளாடையை கழற்றச் சொன்ன விவகாரம் – மத்திய அரசு நடவடிக்கை

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி ஒருவரிடம், அவர் அணிந்திருந்த ப்ராவை கழற்றச் சொன்ன விவகாரம் குறித்து விசாரிக்க தேசிய தேர்வுகள் முகமை குழு அமைத்துள்ளது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு…

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி ஒருவரிடம், அவர் அணிந்திருந்த ப்ராவை கழற்றச் சொன்ன விவகாரம் குறித்து விசாரிக்க தேசிய தேர்வுகள் முகமை குழு அமைத்துள்ளது.

நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மர்தோமா தகவல் தொழில்நுட்ப மையத்தில் நீட் தேர்வு எழுதச் சென்றவர்களிடம் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, மாணவி ஒருவரிடம் அவர் அணிந்திருந்த ப்ராவை கழற்றுமாறு சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சோதனைக்கும் தங்கள் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வெளியாட்களே சோதனை நடத்தியதாகவும் மர்தோமா தகவல் தொழில்நுட்ப மையம் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி. முரளிதரனும் அம்மாநில எம்பிக்களும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்தனர். மேலும், கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்துவும் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நேரில் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன் பேரில், தேசிய தேர்வு முகமை உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு விரைவில் கேரளாவுக்குச் சென்று உண்மை என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.