மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணத்தால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு தற்போது நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1.10 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ் மொழியில் முதல் முறையாக நீட் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த சிவக்குமார் இவரது இரண்டாவது மகன் தனுஷ் (19)மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ம் ஆண்டு +2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இதனையடுத்து 3வது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். நீட் தேர்வு பயம் காரணமாகவே தனது மகன் உயிரை மாய்த்துக் கொண்டதாக தந்தை சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவன்உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், நாளை சட்ட மன்றக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தீர்மானம் முதலமைச்சர் நிறைவேற்ற உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் இன்று காலை அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.








