மறைந்த செஃப் தாமுவுக்கு நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் இரங்கல்!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த செஃப் தாமுவுக்கு நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு (எ) தாமோதிரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

செஃப் தாமுவுக்கு பொதுமக்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல சமையல் கலைஞரும், சமையல் துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவருமான பத்மஸ்ரீ டாக்டர் செஃப் தாமு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தனது தனித்துவமான சமையல் திறமையாலும், எளிமையான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக சமையல் கலையை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். அவரது சேவையையும் சாதனைகளையும் பாராட்டி, பாரத அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு சமையல் துறைக்கும், அவரை நேசித்த மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரும், அக்கலையின் பெருமையை உலகறியச் செய்து கின்னஸ் சாதனை படைத்தவருமான பத்மஸ்ரீ திரு. தாமு அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

சமையலை ஒரு தொழிலாகக் கருதாமல், அதனை ஓர் உன்னதக் கலையாக உயர்த்திக் காட்டிய திரு. தாமு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக சமையல் கலை நிபுணர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.