பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 2022ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், அரசியல் களத்தில் பல திருப்புமுனைகள் அம்மாநிலத்தில் நடைபெறத் தொடங்கியிருக்கிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சித்து ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டம் காணப்படுகிறது. மறுபுறம் அமரேந்திர சிங் தரப்பினர் இடையே இது குழப்பத்தில் தள்ளியது. இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.
நவ்ஜோத் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நியமனம் ஆணையை, அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரீஷ் ராவத்தின் அலுவலகம் தயார் செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், அது உண்மையில்லை எனக் கூறி அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ஹரீஷ் ராவத் தெளிவுப்படுத்தினார்.
“வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அமரேந்திர சிங்கை முன்னிறுத்தித் தான் எதிர்கொள்ள உள்ளோம். அமரேந்திர சிங், நவ்ஜோத் சிங் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.
சித்து தலைமையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை தாம் சந்திக்கத் தயாராக இல்லை என முதலமைச்சர் அமரேந்திர சிங் டெல்லி காங்கிரஸ் தலைமையிடத்தில் தெரிவித்ததாவதாகக் கூறப்படுகிறது.
2004ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, அம்ரிஸ்டர் மக்களவையில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். பின் கட்சியிலிருந்து விலகிய அவர், 2017ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து, அதே ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கிழக்கு அம்ரிஸ்டர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.






