இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தனது நான்கு மாத பெண் குழந்தை ஹன்விகா மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் அசத்தி வரும் நடராஜன் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், 2015-16 இல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்காக முதல்முறையாக அறிமுகமானார். இதில் சிறப்பாக விளையாடிய அவர், டி.என்.பி.எல். தொடரிலும், ரஞ்சி கோப்பையிலும் அசத்தினார். இதன்மூலம் 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது துல்லியமான யார்கர் பந்து வீச்சு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை கவர்ந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு தேர்வானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்திய அணிக்கு தேர்வானதால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டார். அங்கு சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி நாடு திரும்பிய நடராஜன், பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆவலை விட நாட்டுக்காக ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்தார்.
இந்த நிலையில், அவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் இணைந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “நீ எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை உன்னால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும், என்றென்றும் உன்னை நேசிக்கிறோம்” என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.