தேசிய அரசியல்: எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வு – திமுக தலைவர் பங்கேற்பு?

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அடுத்தக்கட்ட முயற்சியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஏற்பாட்டில் ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை…

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அடுத்தக்கட்ட முயற்சியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஏற்பாட்டில் ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தற்போது 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் களமிறங்கியுள்ளார். அதற்காக சமீப காலமாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்துப் பேசி வருகிறார். அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நித்திஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நித்திஷ் குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தற்போது பாஜகவுக்கு எதிரான அணியில் 16 கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் தங்கள் அணியில் சேரக்கூடும் என்றும், ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் கூட்டம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த கூட்டமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட 16 கட்சிகள் கலந்து கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பியவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று திமுக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லையென்றால், அவரது சார்பாக திமுக பொருளாளர் டி ஆர் பாலு அல்லது திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், டெல்லி சேவைகள் அவசர சட்ட விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிற மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினையும் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.