திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மடியில் அமர்ந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் அமைந்துள்ளது சி.இ.டி. (CET) பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் அப்பகுதியில் உள்ள அசோசியேஷன் சார்பில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கையில் பொறியியல் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அமர்வது வழக்கம். மாணவ, மாணவிகள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது குறித்து அப்பகுதியினர் புகார் கூறியதால், அசோசியேஷன் சார்பில் பேருந்து நிழற்குடையில் உள்ள பெஞ்ச் போன்ற இருக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கு பதிலாக இடைவெளிவிட்டு மூன்று இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டன.
இது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பேருந்து நிழற்குடைக்குச் சென்ற மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மடியில் மாணவிகளும், மாணவிகள் மடியில் மாணவர்களும் அமர்ந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவ, மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இங்குள்ள பிரச்னையைப் பற்றி தெரிந்துகொண்டேன். இது சரியான செயல் அல்ல என்பதால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். மாணவ, மாணவிககளுக்கு நிழற்குடையைப் பயன்படுத்த முழு உரிமை உண்டு. இங்கு புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்படும். அது ஆண், பெண் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும்” என்றார்.
-ம.பவித்ரா








