திமுகவின் தலைவராக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைப் பொறுப்பிலான அவரது பயணம் எப்படி இருக்கிறது?
1949 இல் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடக்கத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பே தலைமை பொறுப்பாக இருந்த நிலையில், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தலைவர் பொறுப்பை ஏற்படுத்தி 1969 ஜூலை 27 இல் திமுக தலைவரானார் கருணாநிதி. ஒரு மாநில கட்சியின் நீண்ட கால தலைவராகவும், கட்சியை முன்னிலையில் தொடர்ந்து தக்க வைத்தவருமாக திகழ்ந்த கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு 2018 ஆகஸ்ட் 28 ஆம் தேதி அக்கட்சியின் இரண்டாவது தலைவரானார் மு க ஸ்டாலின்.
ஆற்றல்
எழுத்தாற்றல், பேச்சாற்றல் என அண்ணா, கருணாநிதியோடு அவரை ஒப்பிடும் நிலை அப்போது தொடர்ந்து காணப்பட்டாலும், அத்தகைய விமர்சனங்களை தயக்கமின்றி ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்பவராகவே காணப்பட்டார் ஸ்டாலின். உங்களில் ஒருவன் என்ற தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதி, பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்ற அதன் வெளியிட்டு விழாவில் பேசிய அவர்,
கலைஞரைப் போல் பேசத்தெரியாது, எழுதத்தெரியாது ஆனால் அத்துணையையும் முயன்று பார்ப்பேன்.
அதுதான் இந்த புத்தகம் என சுட்டிக்காட்டினார்.
விமர்சனங்கள்
2018 இல் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றாலும், 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றது முதலே கட்சியின் அத்துணை முடிவுகளையும் நேரடியாக எடுப்பவராகவே இருந்தார் ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், கூட்டணி என வெளியிலும், கட்சிக்குள் இருந்த நிர்வாகிகளின் ஏக்கங்களையும்,
ஜெயலலிதா, கருணாநிதியின் மரணங்களால் எழும்பிய வெற்றிடம் குறித்த விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொள்பவராக இருந்தார் ஸ்டாலின்.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோவையில் பேசிய ஸ்டாலின், விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். எதிர்ப்பு அடக்குமுறைகளை மீறி வளர்ந்தவன் நான். எதிர்ப்புகள் தான் என்னை உற்சாகமாக செயல்பட வைக்கிறது என தனது செயல்பாட்டுக்கான விளக்கத்தையும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
சவால்கள்
திமுகவின் வட்டப் பிரதிநிதி, மாமன்ற பிரதிநிதி, இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என கட்சியின் அடிமட்டம் முதல் உச்சபட்ச பொறுப்பு வரை பெற்ற அனுபவம், மேயர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என அரசு அதிகாரத்திலும் பல்வேறு படிநிலைகளை கடந்தவராக இருந்ததனால் அத்துனை சவால்களையும் எதிர்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வரலாற்றில் இல்லாத அளவாக வெற்றி, உள்ளாட்சி தேர்தல் வெற்றி, சட்டமன்ற தேர்தல் வெற்றி என தொடர் வெற்றிக்கு சொந்தக்காரராக கட்சியின் தலைவராகவும், முதலமைச்சராக அரசு அதிகாரத்திலும் 500 நாட்களை நெருங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
முயற்சிகள்
கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்தைக் கடந்து தனக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின்,
தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் சார்ந்து கடும் எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருவதுடன், பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு, அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு
என தேசிய அரசியல் சார்ந்த முயற்சிகளையும் முன்னின்று மேற்கொண்டு வருகிறார்.
5வது ஆண்டில்…
5வது ஆண்டில் திமுக தலைவராக பயணத்தைத் தொடங்கியுள்ள மு க ஸ்டாலின், திமுகவின் உட்கட்சி தேர்தலை வெற்றிகரமாக முடித்து, பொதுக்குழுவை கூட்டி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டியது மட்டுமல்லாமல், நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம், ஆட்சியின் சவால்களை நாள்தோறும் எதிர்கொண்டு மக்கள் மனங்களை தொடர்ந்து வெல்ல வேண்டிய நிலையிலும் உள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.







