குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டியில் வாள் வீச்சில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி மூன்றாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
குஜராத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் இன்று சேபர் பிரிவு வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்றன. இதில், மகளிருக்கான பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டு விளையாடினார். இறுதி போட்டிக்கு முன்னேறிய அவர், பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எதிர்த்து விளையாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போட்டி தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பவானி தேவி 15-க்கு 3 என்ற கணக்கில் வெற்றியை தட்டி சென்றார். இதன் மூலம் மூன்றாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இந்த பிரிவில் அவர் இரண்டு முறை தங்கம் வென்றுள்ளார். அதுமட்டும் இன்றி இந்த முறை அவர் தமிழ்நாடு சார்பில் களமிறங்கி விளையாடிய நிலையில், முதல் தேசிய போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த வெற்றி குறித்து பேசிய பவானி தேவி, தான் பயிற்சிக்காக நிறையே நாடுகளுக்கு சென்று வந்தேன். இதனால் நேற்று தான் இந்தியா திரும்பினேன். ஜெட் லேக் காரணமாக சற்று சோர்வுடன் இருந்தேன். இருப்பினும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று ஹாட்ரிக் தங்கப் பதக்கத்தை பெற்றது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கொச்சியில் பயிற்சி செய்து வந்ததால் 2011 மற்றும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் கேரளா சார்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்