பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம், அக்கட்சியின் மாநில
பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி அத்துமீறி நடந்து கொண்டதாக, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இமானுவேல் சேகரன்
நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவிடம், பொன்.பாலகணபதி அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் அதன் வீடியோ பதிவு பரவியது.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம், பரமக்குடியில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பாவிடம், பாஜக மாநில பொதுச்செயலாளர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் வரும் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-ம.பவித்ரா








