வேற்று கிரக வாசிகள் குறித்து செவ்வாய் கிரகத்தில் பாறைகளின் துகள்களை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியில் நாசா விண்கலம் பின்னடைவை சந்தித்துள்ளது.
வேற்று கிரக வாசிகளின் ஆய்வுக்காக செவ்வாய் கிரகத்திற்கு பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த 2020 ஜூலையில் நாசா செலுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது செவ்வாயில் ஆய்வுகளை இந்த விண்கலம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாயில் நேற்று துளையிட்டு பாறை துகள்களை ஆய்வு செய்ய முயன்றது. இதில் துளையிடும் முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஆனால், பாறை துகள்களை சேமிக்க முடியவில்லையென நாசா தெரிவித்துள்ளது.
இது குறித்து நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்திற்கான இணை நிர்வாகி தாமஸ் சூர்புச்சென், “நாங்கள் எங்கள் முயற்சிகளை கைவிடவில்லை. வேறு ஒரு இடத்தில் துளையிட்டு இந்த ஆய்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும்.” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த துளையிடும் பணிகள் 11 நாட்கள் நடைபெறும். இதன் மூலம் பண்டைய நுண்ணுயிர் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இடத்தில் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏரி இருந்திருக்கலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








