முதல் டெஸ்ட்: ராகுல், ஜடேஜா அரைசதம், 278 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் 278 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில்  தொடங்கியது. முதலில் பேட்…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் 278 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில்  தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங் ஸில் 183 ரன்களில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளில், ரோகித் சர்மா 36 ரன்களில் ராபின்சனின் ஷார்ட் பிட்ச் பந்தில் ஆட்டமிழந்தார். நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4 ரன்களிலும் கேப்டன் விராத் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் துணை கேப்டன் ரஹானே 4 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 125 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 57 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப், 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜா, கே.எல்.ராகுலுடன் இணைந்தார்.

கே.எல்.ராகுல் 84 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ஜடேஜா தன் பங்குக்கு அரைசதம் விளாசினார். அவர் 56 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் பும்ரா புயல் வேகத்தில் மட்டையை சுழற்றி, 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சிராஜ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில், ஓலி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் தனது 2 வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. அந்த அணி 11.1 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக் கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்களுடனும் டோம் சிப்ளே 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நான்காவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.