ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் எதிரொலி ; நமது அம்மா ஆசிரியர் விலகல்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தலைதூக்கியதன் காரணமாக அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நதிகாக்கும்…

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தலைதூக்கியதன் காரணமாக அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நதிகாக்கும் இரு கரைகள்” என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்து அக்கட்சியில் உள்ள பலர் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு ஆதரவாக இல்லை என்றால் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை பலரை சூழந்துள்ளது. அதிமுகவில் உள்ள முக்குலத்தோர் பலரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ரசிக்கவில்லை. அதேநேரத்தில் ஓபிஎஸை நம்பி சென்றவர்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. இந்த சூழலில் ஓபிஎஸை ஆதரித்தால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே எடப்பாடி தரப்பினரை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடங்கி தென் மாவட்டங்கள் வரை பரவலாக உள்ள முக்குலத்தோர் சமூக வாக்குகளை அக்கட்சி இழக்கும் என்றே தெரிகிறது. இதனை சரி செய்யவே முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கொண்டு ஓபிஎஸிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பேட்டி கொடுக்க வைக்கின்றனர். ஆனால் அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை. நீர் பூத்த நெருப்பாக இருக்கும் இப்பிரச்சனை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்றே தெரிகிறது. அதனுடைய ஒரு பகுதியே அதிமுகவின் செய்தி தொடர்பாளரும், நமது அம்மாவின் ஆசிரியருமான மருது அழகுராஜின் விலகல்  என பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘அம்மாவின் மறைவை ஓட்டி எடப்பாடி பழனிசாமி முதன்முதலில் சின்னம்மாவை (சசிகலா) ஒதுக்கினார். அப்போது கூறப்பட்ட காரணம், அம்மாவின் ஆட்சி தொடர வேண்டுமென்றால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதை தவிர வேறு வழியில்லை என கூறப்பட்டது. டிடிவி தினகரனின் நடவடிக்கையால்தான் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டது என்றும், சின்னம்மா சிறையில் விட்டு வெளியே வரும்போது இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என நாங்கள் நம்பினோம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவின் பிடி எடப்பாடியின் கைக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் யாருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தாத ஓபிஎஸை தற்போது கட்சியில் இருந்து ஓரங்கட்டுவது என்பது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். முக்குலத்தோர் சமூக மக்களின் வாக்குகளை இழக்கும் என எங்கள் தரப்பில் இருந்து தலைமையை எச்சரித்தோம். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால் நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகிவிட்டார் என அவரது தரப்பினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து மருது அழகுராஜிடம் கேட்டபோது, ஆற்றின் இரு கரைகள் போல் இருந்த இருவர் மோதிக் கொள்வது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை ஒரு சில நாட்களில் தமது நலன் விரும்பிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பேன் என்றார்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.