இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழர்கள் தற்சார்பு நிலையை அடையவேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தற்போதைய தலைவரும், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதார நிலை ஸ்தம்பித்துபோய் உள்ளதாக செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் எம்.பி. வேதனையுடன் தெரிவித்தார், தமிழர்களை மதிக்காத சிங்கள அரசை மதித்து அவர்களிடம் உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பது காலத்தை வீணடிப்பதாகும் என கூறிய அவர், இலங்கை தமிழர்கள், தங்களை தாங்களே பராமரித்து பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நம் மீது நம்பிக்கை வைத்து நமக்கு தேவையானவற்றை நாமே தயாரிப்பதுதான் தற்சார்பு நிலை என்று கூறியுள்ள விக்னேஷ்வரன், புலிகள் காலத்தில் அதுபோன்றதொரு தற்சார்பு நடவடிக்கைகளில் இலங்கை தமிழர்கள் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால் போருக்கு பின்னர் பிச்சை பாத்திரம் ஏந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விக்னேஷ்வரன் தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் பிறரை எதிர்பார்ப்பதே தற்போதைய நிலைமையாக உள்ளதாக கூறியுள்ள அவர், நமது வாழ்க்கையை நாமே முன்னேற்ற என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்கள் தங்கள் காலத்தை வீணடிக்காமல், புதிய புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
பட்டினி, பஞ்சம், நோய் நொடிகளால் எதிர்காலத்தில் பாதிக்காத வகையில் இலங்கை தமிழர்கள் தன்னிறைவு பெற வேண்டும் எனக் கூறியுள்ள விக்னேஷ்வரன், தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு நடவடிக்கைகளில் ஊக்கமுடன் பயணிக்க, இன்றைய நிலைமை உறுதுணையாக இருக்க தாம் இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.