சென்னை பெரியார் ஈவெரா சாலையில், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் ரோடு என பெயர் பலகை வைக்கப்பட்ட நிலையில், அதன் மேல், பெரியார் ஈவெரா சாலை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை மத்திய ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை அமைந்துள்ள சாலை பெரியார் ஈவெரா சாலை என அழைக்கப்படுகிறது. அந்தச் சாலையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளிலும் அதுவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் அந்த சாலையில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.
அதில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் ரோடு எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதுகுறித்து விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறையினர் தங்கள் ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் ரோடு என்ற பெயர்தான் உள்ளதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் வெஸ்டர்ன் டிரங் சாலை என்ற பெயரை கருப்பு வண்ணத்தால் அழித்தனர். இதனிடையே, இன்று அதிகாலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அதில் பெரியார் ஈவெரா சாலை என எழுதி ஒட்டினர். இதுகுறித்த விளக்கமளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் ஈவெரா பெரியார் என்பதும், பெரியார் ஈவெரா என்பதும் ஒருவரையே குறிப்பதாகவும், வழிகாட்டி பலகை அமைக்கும்போது தவறு நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.








